சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த 09 மாதங்களாக உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதற்கு எதிரான தடுப்பு மருந்துகள் இன்னும் தயாராகவில்லை என்பதால், வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நாளுக்கு நாள் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப் பகுதியில் மாத்திரம் சுமார் 20 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது.
இது கொரோனா கண்டறியப்பட்டது முதல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான தொகை எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகம் என கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, எனினும் இந்த வாரத்தில் பலி எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது. மேற்படி 7 நாட்களில் மொத்தம் 36, 764 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவி உள்ளனர்.
இந்த 20 லட்ச பாதிப்பில் அதிகபட்சமாக 38 சதவீதத்துக்கும் அதிகமானோர் வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். பலி எண்ணிக்கையை பொறுத்தவரை, ஐரோப்பா மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் முந்தைய வாரத்தை ஒப்பிடும்போது இந்த வாரம் ஐரோப்பாவில் 27 சதவீத பலி எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக ‘ஸ்புட்னிக்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மொத்தத்தில் உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா தொற்று, மனிதர்களுக்கு தொடர்ந்து சவாலாகவே விளங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.