சிலி மீட்புக் குழுவான டோபோஸுடன் பணிபுரியும் ஒரு துப்பரியும் நாய் இடிபாடுகளுக்கு வெளியே இருந்தபடி ஒருவர் உயிருடன் இருப்பதற்கான சமிக்ஞையை வழங்கியதையடுத்து மீட்பு முயற்சி தொடங்கப்பட்டது. கடந்த பத்து நாட்களாக மீட்பு பணியாளர்களுடன் துப்பரியும் நாய் பணியில் உள்ளது.
வெடிப்புக்கு முன்னதாக அந்த இடத்தில் காணப்பட்ட நான்கு மாடி கட்டிடம் ஒன்று தற்போது முழுவதுமாக இடிந்து வீழ்ந்துள்ள நிலையில் இதன் இடிபாடுகளுக்கு இடையே ஒருவர் உயிருடன் இருப்பதாக மீட்பு பணியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மீட்பு குழுவினால் குறித்த இடத்திற்கு அனுப்பப்பட்ட சிறப்பு உபகரணங்கள் இரண்டு உடல்கள் இருப்பதைக் கண்டறிந்தன, இதில் ஒருவர் ஒரு வயது குழந்தையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரில் ஒருவர் மட்டும் உயிருடன் இருப்பதாகவும் அவரின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 18 துடிப்புகளை காட்டுவதாகவும் உபகரணங்கள் கண்டறிந்துள்ளன.
நேற்று (03) தொடங்கப்பட்ட தேடுதல் பணி இடை நிறுத்தப்பட்டு மீண்டும் இன்று அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.00 மணிக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது.
எனினும் பல மணி நேரங்களின் பின் உயிருடன் இருப்பவரின் இதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 10 துடிப்புகளை உபகரணங்கள் காட்டியுள்ளன.
ஆரம்பத்தில் இருந்தே பேரழிவிற்கு வாய்ப்பினை ஏற்படுத்திய லெபனான் அதிகாரிகள், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் முழுமையாக விழிப்புடன் இருந்தார்களா என்பது குறித்து இந்த சம்பவம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த மாதம் பெய்ரூட்டின் துறைமுகத்தில் சுமார் 2,700 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததையடுத்து கிட்டத்தட்ட 200 பேர் இறந்தனர், 6,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் நகரின் பெரும் பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.