நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள போதிலும் அக்காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விரைவாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தமது பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார், முல்லைத் தீவுக்கான ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எமது பகுதிகளில் பாரியளவு காணிப் பிரச்சினை காணப்படுகிறது. வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள காணிப் பிரச்சினைகளே அதிகமாகவுள்ளது.
அத்துடன் பல வருடங்களாக இருக்கின்றவர்களுக்கு அந்த காணிக்கான ஆவணங்கள் இல்லாமல் இருக்கின்றது. இவ்வாறான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் விதமாகவே ஜனாதிபதி “செழிப்பின் பார்வை” என்ற செயற்றிட்டத்தின் ஊடாக மக்கள் வீடுகள் கட்டியிருந்தாலும் சரி விவசாய காணிகள் மற்றும் தோட்டக் காணிகளானாலும் சரி மக்களின் பாவனையில் நீண்டகாலமாக இருக்கும் பட்சத்தில் அதற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பங்களை இம் மாதம் 30 ஆம் திகதிக்குள் பிரதேச செயலகங்களின் ஊடாக விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்ப படிவங்களை எமது அலுவலகத்திலும் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளதுடன் காணி ஆணையாளர் நாயகத்தினால் சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்டு அவர் ஊடாக செயற்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் என்ற முறையில் எங்களுக்கும் பாரிய பொறுப்புள்ளதால் மாவட்ட அரசாங்க அதிபர்களை தொடர்பு கொண்டு மிக விரைவாக கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக மக்களுக்கு தெளிவுபடுத்தி விண்ணப்பங்களை பெறுமாறு தெரிவித்துள்ளேன்.
மக்கள் 30ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை பெற்று நிரப்பி பிரதேச செயலகங்களில் வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். மக்களுக்கான சேவைகள் விரைவாக சென்றடைந்து தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் எண்ணமாக இருக்கின்றது.
அத்துடன் வவுனியாவில் வீடமைப்பு திட்டங்களை பெற்றவர்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். கிராமங்களுக்கு செல்ல முடியாதுள்ளது. அவர்கள் மிகவும் கஸ்டத்தில் இருக்கின்றார்கள்.
அவர்கள் வீடு கட்டமுடியாத நிலையில் தான் இவ்வாறான அரச உதவியை பெறுகின்றனர். அவ்வாறு உதவியை பெற்று நடுத்தெருவில் நிற்கும் நிலை மக்களுக்கு கடந்த அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இவற்றை மிக வரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும் என வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுராதவை வட மாகாணத்திற்கு அழைத்து இந்நிலைமைகளை காண்பித்திருந்தோம். எனவே, மக்களுக்கு துரிதமாக இவ்வேலைத் திட்டத்தினை செயற்படுத்தும் வேலைத்திட்டத்தில் இவை நடைபெற்று வருகின்றது.
அதேபோன்று தென்னை, பனை அபிவிருத்தி வேலைகளை அதிகளவில் நாம் இந்த பகுதிகளில் பாரிய அளவில் செய்ய வேண்டியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் அதிகளவான பனைகள் உள்ளது. ஆனால் அதனை மக்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாத நிலையில் சரியான திட்டம் இன்றி இருப்பதால் அதன் பெறுமதியை மக்களுக்க உணர்த்துவதற்காக பயற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்.
அத்துடன் தென்னையை இப்பகுதியில் ஊக்குவிப்பதற்காக அதற்குரிய இராஜாங்க அமைச்சரை இப்பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன்.
இதேவேளை, கல்வி அமைச்சரை சந்தித்து கல்வி அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியபோது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் தினத்தை வவுனியாவில் நடத்துமாறு கோரியுள்ளோம்.
அத்துடன் வவுனியா வளாகத்தினை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. கடந்த அரசாங்கத்தாலும் இது தொடர்பான முயற்சி எடுக்கப்பட்டாலும் அது ஏதோ ஒரு காரணத்தால் தாமதமடைந்து செல்கின்றது.
ஏனைய இடங்களில் ஒரே இரவில் பல்கலைக்கழகங்களாக மாற்றமடையும் பொது இங்கு மட்டும் ஆவணங்களையே கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனினும் வவுனியா மாவட்டத்திற்கான பல்கலைக்கழகம் மிக விரைவாக வரவேண்டும். அப்போது எமது நகரமும் வளர்ச்சி அடையும்.
அதேபோல் வவுனியா மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகரசபைகளாக்க வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே, அவற்றை மிக விரைவில் மாநகர சபைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதனோடு நல்ல நகர திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டியுமுள்ளது. வன்னியில் உள்ள மூன்று மாவட்டங்களின் நகரங்களும் ஏனைய நகரங்களோடு ஒப்பிடுகையில் பின்தங்கி காணப்படுகின்றது.
வவுனியாவில் நகரச திட்டமிடலில் பல நல்ல திட்டங்கள் இருந்தது. குறிப்பாக வவுனியா மாவட்ட செயலகத்தினை மாற்றுவது வைத்தியசாலையை விஸ்தரிப்பது என பல திட்டங்கள் இருந்த போதிலும் அவற்றை குழப்பும் விதமாக வேறு திட்டங்களை திணித்துள்ளார்கள். எனினும் இவற்றை சீர் செய்து 5 வருங்டகளில் நிறைவேற்றுவோம் என்று அவர் மேலும் தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
-தெறண