அரிசியின் விலை சந்தையில் எக்காரணத்தைக் கொண்டும் அதிகரிக்கப்படாது என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று உறுதியளித்தார்.
அரிசியின் செயற்கை தட்டுப்பாட்டை நீக்குதல் நுகர்வோருக்கு சிரமத்தை உண்டாக்கும் செயற்பாடுகள் குறித்து சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சசர் இதனை வெளிப்படுத்தினார்.
நுகர்வோருக்கான அதிகூடிய சில்லறை விலையை அதிகரிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“நெல்லைப் பதுக்கி வைத்து அவற்றை சந்தைக்கு விடாது விலைகளை அதிகரிக்கும் அரிசி வர்த்தகர்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே எம்மிடம் உள்ளன. செயற்கை அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்க யாருக்கும் அனுமதியில்லை” என அவர் தெரிவித்தார்.
நுகர்வோரின் நாளாந்த கேள்விக்கேற்ப இருப்பைப் பேணவும் நாட்டில் செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்காது இருக்கவும் அமைச்சரவை அனுமதியுடன் அரசாங்கம் ஏறத்தாழ 100இ000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
வர்த்தகர்கள் பதுக்கி வைத்திருக்கும் அரிசியை சந்தைக்கு வெளியிட்டால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை என்பதையும் அமைச்சர் வலியுறுத்திக் கூறினார்.