கொழும்பில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்காக அண்மையில் விதிக்கப்பட்டிருந்த வீதி ஒழுங்கை சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, இன்று முதல் மோட்டார் சைக்கில்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள், பேருந்து முன்னுரிமைப் பாதையில் செல்ல வேண்டும் என அமுல்படுத்தப்பட்டிருந்த சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் வெற்றியளிக்காத காரணத்தினாலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள், பேருந்து முன்னுரிமைப் பாதையில் மாத்திரமே செல்ல வேண்டும் என பொலிஸார் அறிவித்திருந்தனர்.
எனினும், குறித்த ஒழுங்கை சட்டத்தினால் பாரிய வாகன நெரிசல் ஏற்படுவதாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்குள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய, குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு ஒழுங்கை சட்டத்தை நடைமுறைப்படுத்தாது இருக்க தீர்மானிக்கப்பட்டதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
எனினும், மூன்று ஒழுங்கைகள் உள்ள வீதிகளில், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் முதலிரண்டு ஒழுங்கைகளை மாத்திரமே பயன்படுத்த முடியும் எனவும் மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.