பானந்துரை தெற்கு பொலிஸார் கொழும்பில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
15 வயதான மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர், பானந்துரையில் உள்ள ஒரு பாடசாலையின் மாணவர் என்பதுடன், பானந்துரையில் உள்ள சந்தேக நபரின் இல்லத்திற்கு அருகில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குறித்த மாணவரின் பெற்றோர் அவரை தனிப்பட்ட வகுப்பிற்கு சந்தேக நபரிடம் அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் சனிக்கிழமைகளில் சந்தேகநபரின் வீட்டிற்கு கல்வி கற்க வருகை தந்ததாகவும், சந்தேகநபர் கடந்த ஜூலை முதல் அந்த மாணவனை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவரிடமிருந்து பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின்படி, சந்தேக நபர் தினமும் தனது (சந்தேக நபரின்) வீட்டிற்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சந்தேக நபரின் வீட்டிற்கு செல்வதை தவிர்த்த அந்த மாணவன் தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த சிறுவனின் பெற்றோரும், அவரது உறவினர்களும், சந்தேக நபரான பிரதி அதிபரின் வீட்டிற்கு சென்று அவரை மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில், சந்தேக நபரின் மனைவி இந்த சம்பவத்தை மூடிமறைக்க ஒரு லட்சம் ரூபாய் வழங்கியதாக கூறியுள்ளார்.
இதனால், பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் புகார் அளிக்க ஆரம்பத்தில் தயக்கம் காட்டியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சந்தேக நபரின் 56 வயதான மனைவியும் ஆசிரியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.