முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான முஹம்மட் ரிப்கான் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணையை உரிய முறையில் விரைவாக மேற்கொண்டு இது தொடர்பாக ஏனைய சந்தேகநபர்கள் காணப்படுவார்களாயின், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (10) உத்தரவிட்டுள்ளார்.
குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
போலி ஆவணங்கள் தயாரித்து தலைமன்னார் பிரதேசத்தில் 80 ஏக்கரைக் கொண்ட
இரண்டு காணிகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்தமை தொடர்பான முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த ஆவணங்களில் காணப்படும் போலி கையொப்பங்கள் தொடர்பில் அரச இராசாயன பகுப்பாய்வு அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னர், விசாரணையை நிறைவு செய்து விசாரணை அறிக்கையை சட்ட மாஅதிபரின் ஆலோசனை பெறுவதற்காக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.