சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இத்திரைப்படம் கடந்த அக்டோபர் 30ஆம் திகதி OTT தளங்களில் வெளிவரவிருத்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் கடந்த மார்ச் மாதம் வெளியானது.
இதில் "மண் உருண்ட மேல... மனுச பையன் ஆட்டம் பாரு” என்று தொடங்கும் பாடலில், “கீழ்சாதி உடம்புக்குள்ளே ஒடுறது சாக்கடையா? அந்த மேல் சாதிகாரனுக்கு இரண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், அனைத்து சாதியினரும் ஒன்றாக அமைதியாக வாழும் தமிழகத்தில் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் இப்பாடல் வரிகள் இருப்பதால், 2022 ஆம் ஆண்டு வரை இப் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது விசாரணைக்கு வந்த நிலையில், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.