பூஸா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (12) பிற்பகல் கண்டியில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிலரது கோரிக்கைகள் நிறைவேற்றக் கூடியதாக இருக்கின்ற போதிலும், சிறைச்சாலைகளுக்குள் இருந்து கைதிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் நடவடிக்கைக்கு அச்சமடைந்து இந்த பதவியை வகிக்க முடியாது.
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் குறித்த சிலரே நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட பாரிய குழுவினராவர் என பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தரணிகளை சிறைச்சாலைக்குள் பரிசோதனையின்றி அனுப்பி வைக்குமாறு அவர்கள் கோருகின்றனர்.
அதியுயர் பாதுகாப்பு வலயமாக அந்த சிறைச்சாலை வளாகம் இருக்கின்றபோது, அவர்களது கோரிக்கைகளை ஏற்கமுடியுமா என பாதுகாப்பு செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.