நீதித்துறை கட்டமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் தொடர்பில் நீதி அமைச்சருக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (08) மாலை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெனா பி ரெப்ளிஸ் மற்றும் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, நீதித்துறை, அதனுடன் தொடர்புடைய பொறுப்புகள் மற்றும் எதிர்கால திட்டமிடல்கள் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நீதி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் தேக்க நிலையில் உள்ளமை, நீதித்துறை கட்டமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடி நிலைமை, நீதிபதிகளுக்கு பயிற்சி வழங்குதல் என்பன தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.