மதுரையை பூர்வீமாக கொண்ட பாலாஜி, மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்டாக தன் வாழ்க்கையை தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். வடிவேலு பாணியில் இவர் செய்த காமெடிகள் பிரபலமானதால் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து அந்த டிவியின் நட்சத்திர ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்தவர், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு அதனால் இரு கைகளும் வாதத்தால் முடங்கியது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்பு வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். போதிய பண வசதி இல்லாததால் இறுதியாக இன்று (10) சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
யதார்த்தமான பேச்சு மற்றும் நகைச்சுவையால் ரசிகர்களை கொள்ளை கொண்ட பாலாஜி, ரசிகர்களிடம் மட்டுமல்லாது வடிவேலுவிடமே பாராட்டை பெற்றவர். அவரின் திடீர் மறைவு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.