20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதோடு, நாடாளுமன்றிற்குள் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் நாடாளுமன்றில் பதற்ற நிலை ஏற்பட்டதோடு, சபை நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லா நாடாளுமன்றிலிருந்து வெளியேறினார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட அதாவுல்லா அணிந்திருந்த உடை (மேலங்கியின் பொத்தான் அணியப்படாத நிலையில்) எந்த வகையிலும் பாராளுமன்ற கலாசாரத்திற்குப் பொருத்தமானதல்ல என்றும், இது நிலையியற் கட்டளைச் சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாக சக உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தனர்.
$ads={2}
இதனை தொடர்ந்து அதாவுல்லா நாடாளுமன்றிலிருந்து தாம் வெளியேறுவதாக அறிவித்துவிட்டு வெளியேறினார்.
இதனை எதிர்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்ததோடு, நாடாளுமன்ற விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
குறித்த உடையினை அணிந்து நாடாளுமன்றிற்குள் பிரவேசிக்க முடியாது என தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர்கள் அவரை நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றுமாறும் கோரினர்.
இதன் பின்னர் சபையிலிருந்து வெளியேறிய அதாவுல்லா, தாம் குறித்த ஆடை அணிந்தமைக்கான காரணத்தினையும் தெரிவித்ததோடு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இது போன்ற உடையை அணிந்திருந்தார் எனவும், நினைவு கூர்ந்தார்.
அத்துடன் குளிர் காரணமாகவே தாம் அவ்வாறு ஆடை அணிந்ததாகவும் தெரிவித்தார்.
பின்னர் அவர் தனது மேலங்கியின் பொத்தானை சரி செய்த பின்னர் மீண்டும் பாராளுமன்றில் நுழைய அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.