ஐபிஎல் 2020-லிருந்து முழுதும் விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொந்தக் காரணங்களினால் விலகுவதாகவும், தன்னை இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விடுவிக்கவும் அவர் நிர்வாகத்துக்குக் கூறியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அதிகாரப் பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் விதிமுறைகளின் படி ஒருமுறை விலகுவதாக எழுத்து மூலம் தெரிவித்து விட்டால் மீண்டும் அந்தத் தொடரில் இடம்பெற முடியாது, குறிப்பாக இப்போதைய கோவிட்-19 காலத்தில் இது மிகுந்த சிரமம்.
சுரேஷ் ரெய்னாவுக்கும் சிஎஸ்கேவுக்கும் மோதல் ஏற்பட்டதில் அவரும் விலகுவதாக அறிவித்து நாடு திரும்பினார். இப்போது ஹர்பஜன் சிங் விலகுவதாகத் தெரிவிக்கப்படவுள்ளது தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் மற்றும் 11 பேருக்கு கரோனா பாசிட்டிவ். இந்நிலையில் 2 வீரர்கள் இல்லாமல் சிஎஸ்கே பயிற்சியைத் தொடங்கவுள்ளது. ஹர்பஜன் சிங் ஐபிஎல் 2020 தொடரில் பங்கேற்பது சந்தேகம்தான் என்று தெரிகிறது.
கடந்த வாரம் சிஎஸ்கே அணியில் 13 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது. செப்.19-ல் ஐபிஎல் தொடர் துபாய் , ஷார்ஜா, அபுதாபியில் நடைபெறத் தொடங்குகிறது.
இந்நிலையில் சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குக் கூறும்போது, “இன்றைய தினத்திலிருந்து பயிற்சி தொடங்குகிரது. 13 பேர் நீக்கலாக மற்றவர்களுக்கு கரோனா நெகெட்டிவ் என்று முடிவாகியுள்ளது. பாசிட்டிவ் என்று வந்தவர்களுக்கு இருவார கால தனிமைப்படுத்தலுக்குப் பிறகே மீண்டும் டெஸ்ட் எடுக்கப்படும்.” என்றார்.
ஹர்பஜன் சிங் இல்லாவிட்டாலும் கூட சிஎஸ்கே அணியில் பியூஷ் சாவ்லா, மிட்செல் சாண்ட்னர், இம்ரான் தாஹிர் ஆகியோர் உள்ளனர்.