பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் சாட்சியம் வழங்குவதனை இரகசியமாக பதிவு செய்தமை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் உறுப்பினர் மற்றும் அதற்கு ஒத்தாசை வழங்கிய சட்டத்தரணி ஆகியோருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஈஸ்டர் ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அதன் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒழுக்காற்று குழுவுக்கு இதுகுறித்து அறிவித்து குறித்த சட்டத்தரணிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஞானசார தேரர் சாட்சியமளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பதில் செயலாளரான மௌலவி முர்ஷித் அதனை தனது கைப்பேசியில் இரகசியமாக படம்பிடித்திருந்தார்.
பின்னர், அவரை வெளியில் அழைத்துச் சென்று, இது குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார்.