அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கும் உறுதிபடுத்துவதற்கும் உலக நாடுகளை ஊக்குவித்து 2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 ஆம் திகதி சர்வதேச ஜனநாயக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
தற்போதைய மக்கள் சமூகத்தினுள் அனைவரும் தங்களது ஜனநாயக உரிமை உறுதிபடுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவர்களது வாழ்க்கையில் சுதந்திரம் மற்றும் சந்தோஷத்தை அனுபவிக்கும் உரிமையை பாதுகாத்தல் ஜனநாயகத்தின் குறிக்கோளாக காணப்பட வேண்டும் என நாம் நம்புவோம்.
எமது நாட்டு மக்களின் வாழும் உரிமைக்காக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு சென்ற கடந்த காலம் இந்த தருணத்திலும் எனது ஞாபகத்திற்கு வருகிறது. பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டிற்கு சமாதானத்தை பெற்றுக்கொடுத்து, இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிபடுத்துமாறு அன்று நாம் பிரார்த்தித்தோம்.
நாம் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்காக முன்னிற்க முடிந்ததில் ஒரு நாடு என்ற வகையில் நாம் பெருமைப்படலாம். தேர்தல்களை நடத்தாத அரசாங்கங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து நாட்டு மக்களுடன் ஜனநாயகத்தின் வெற்றிக்காக நாம் செயற்பட்டோம்.
எதிர்காலத்திலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தி மக்கள் எம் மீது கொண்ட ஜனநாயகத்தின் உன்னத விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கு ஒரு அரசாங்கமாக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்ற உறுதிப்பாட்டை நாங்கள் அறிவிக்கின்றோம்.
ஜனநாயகத்தை பாதுகாத்து சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசு என்ற வகையில் எதிர்காலத்தை நோக்கி முன்செல்வதற்கு சர்வதேச ஜனநாயக தினமான இன்று அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.