20ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபில், ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனும் விடயம் நீக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவை 20ஆவது திருத்தத்தில் பாராளுமன்ற சபையாக மாற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்படும் பிரதிநிதிகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னைய அரசியலமைப்பு திருத்தத்தில் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மூவர் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சிவில் பிரதிநிதிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருந்தன. 20ஆவது திருத்தத்தில் அது தொடர்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்ற விடயம் 20 ஆவது திருத்தத்தில் மாற்றப்பட்டு, ஜனாதிபதியும் அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சிபாரிசின் அடிப்படையில் அமைச்சர்களை நியமிக்க முடியும் என்ற விடயம் மாற்றப்பட்டு, ஜனாதிபதியாலும் அமைச்சர்களை நியமிக்க முடியும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.
19ஆவது திருத்தத்தில் உள்ளவாறு இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்கு பாராளுமன்றம் செல்ல முடியாது என்ற விடயம் திருத்தப்பட்டு, அவ்வாறானவர்கள் பாராளுமன்றம் செல்ல முடியும் எனும் விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஜனாதிபதியாவதற்கான வயதெல்லை 35 இலிருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.