அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் பசில் ராஜபக்ஷவுக்கானது அல்ல அது எனது முடிவு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய (20) அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதத்தில் 19ஆவது திருத்தத்தை தொடர்ந்தும் வைத்திருக்க விரும்பினால் அதனை நீங்கள் வைத்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
$ads={1}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 20ஆவது திருத்தத்தின் நகல் வடிவத்தினை வர்த்தமானியில் இடம்பெற்றுள்ள விதத்தில் எந்த வித மாற்றங்களும் இன்றி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என விரும்புகின்றார்.
தற்போது உருவாக்கப்படும் புதிய அரசமைப்பில் மாற்றங்களை அல்லது புதிய விடயங்களை இணைத்துக்கொள்ள முடியும் என அவர் கருதுகின்றார்.
நகல் வடிவு தயாரானதும் எதிர்கட்சிகள் சிவில் சமூகத்தினர் உட்பட அனைவரினதும் கருத்தினையும் பெறவேண்டும் எனவும் அவர் கருதுகின்றார்.
கடந்த புதன் அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இது குறித்த தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் நான் அரசமைப்பு மாற்றங்களை கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ள அவர் மாற்றங்களை மேற்கொள்ளாமல் நாட்டை நிர்வகிப்பது கடினமான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.
19ஆவது திருத்தம் சில அரசசார்பற்ற அமைப்புகளின் முயற்சிகளினால் கொண்டுவரப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
$ads={2}
19ஆவது திருத்தத்தில் சில சிறந்த விடயங்கள் உள்ளன என அமைச்சரவையில் தெரிவித்த ஜனாதிபதி அவற்றை நகல்வடிவில் சேர்த்துக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
புதிய அரசமைப்பின் நகல்வடிவம் தயாரானதும் மாற்றங்களை கோருவதற்கும் புதிய விடயங்களை சேர்ப்பதற்கும் அனைவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
19ஆவது திருத்தத்தை நீங்கள் தொடர்ந்தும் வைத்துக்கொள்ள விரும்பினால் தொடர்ந்தும் வைத்துக்கொள்ளுங்கள் என ஜனாதிபதி தெரிவித்தார்.
20ஆவது திருத்தம் பசில் ராஜபக்ஷவுக்கானது இல்லை அது எனது முடிவு என ஜனாதிபதி தெரிவித்தார்.
-தினக்குரல்