20வது அரசியலமைப்பு திருத்தத்திற்கான முழுப் பொறுப்பையும் தாம் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
20வது திருத்தத்தை வரைந்தது யார் என கடந்த சில தினங்களாக அரசாங்கத்திற்குள்ளேயே குழப்பங்களும், விவாதங்களும் இடம்பெற்று வந்தது.
இந் நிலையில், ஒருவழியாக இந்த விவகாரத்திற்கு தாம் பொறுப்பேற்பதாக ஜனாடிபதி கூறியுள்ளார்.
இதேவேளை, 20 வது திருத்தம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்திருந்த போதும், நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அது சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
எனினும் நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அமைச்சர் மஹிந்த அமரவீர, புதிய அரசியலமைப்பு திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டதாகக் கூறினார்.
ஒரு புதிய அரசியலமைப்பு உடனடியாக உருவாக்கப்படும் என்றும், புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் அனைத்து குறைபாடுகளையும் ஜனாதிபதி நிவர்த்தி செய்வார் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை 20 வது அரசியலமைப்பு திருத்தத்தின் வரைவு இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று நடைபெற்ற நிகழ்வில் கூறியிருந்தார்.
அத்துடன் இலங்கையின் சட்டங்கள் சர்வதேச தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படாது. பாராளுமன்றம் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் எனவும் சர்வதேச அமைப்புகளை திருப்திப்படுத்துவது கடந்த நிர்வாகத்தின் கொள்கை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனினும், இந்த திருத்தம் வரும் வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று அமைச்சர் வீரவன்ச இதன்போது மேலும் கூறினார்.