இந்தியாவில் இருந்து IOC நிறுவனத்திற்காக திருகோணமலை துறைமுகத்திற்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பலின் பணிக்குழாமின் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பினை பேணிய 05 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி 4,000 மெட்ரிக் டொன் எரிபொருளுடன் குறித்த கப்பல் இந்தியாவில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு பிரவேசித்துள்ள நிலையில் பின்னர் திருகோணமலை துறைமுகத்திற்கு சென்றுள்ளது.
இந்நிலையில் அந்த கப்பலின் பணிக்குழாமினர் திடீரென நோய் நிலைக்கு உள்ளானதால் PCR பரிசோதரனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
எனினும் அந்த கப்பலின் பணிக்குழாமினர் கொழும்பு துறைமுகத்தில் அல்லது திருகோணமலை துறைமுகத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்து எவருடனும் நேரடி தொடர்பினை பேணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 22 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய தொற்று உறுதியான 3,208 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
மேலும், கொரோனா தொற்று உறுதியாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறபவர்களின் எண்ணிக்கை 139 ஆக குறைவடைந்துள்ளது.