நாட்டின் பிரதான 06 பொறியியல் பீடங்களுக்கு மேலதிக 405 மாணவர்கள் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பு, உயர்கல்வி அமைச்சு வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது இலங்கையில் பொறியியல் பீடங்களைக் கொண்ட பேராதெனிய, ஶ்ரீ ஜயவர்தனபுர, யாழ்ப்பாணம், ருஹுணு, மொரட்டுவை, தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் இந்த 405 மாணவர்களும் இணைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
"அமைச்சர் என்ற வகையில், பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் தலையிடும் எண்ணம் எனக்கோ எமது அரசாங்கத்திற்கோ இல்லை. ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள சுபீட்சத்தின் நோக்கு பிரகடனத்திற்கு அமையவே செயல்பட விரும்புகிறோம். அதன் இலக்குகளை அடைவதே எமது நோக்கம். குறிப்பாக பல்கலைக்கழக கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இடையில் காணப்படும் தற்போது நிலவும் பொருந்தாத தன்மைக்கு தீர்வு காண வேண்டும். இந்த நோக்கத்திற்காக, தொழில் சார்ந்த பாடநெறியான பொறியியலில் இவ்வாண்டு மேலும் 405 மாணவர்களை சேர்ப்பதன் மூலம் நாம் முன்னோக்கி ஒரு காலடியை வைக்கிறோம்” என்றார்.
இந்நிகழ்வில், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அதன் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார மற்றும் அந்தந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பீடாதிபதிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.