இவ்வாறு குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டதன் பின்னர், பிரதிவாதிகள் இருவரும் தலா 10,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்வதற்கு மேல் நீதிமன்றம் அனுமதித்தது.
சரீரப் பிணையில் கையெழுத்திடும் பிணையாளர், பிரதிவாதிகளின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டுமெனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இதன்போது நிபந்தனை விதித்தார்.
பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ள நீதவான், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளங்களை பெறுவதற்கு முன்னர், குற்றம் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரிக்குமாறும் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்த வழக்கின் ஆரம்ப விசாரணை அறிக்கையை மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் மேல் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகள் அடுத்த மாதம் 22 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளன.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி திம்பிரிகஸ்யாய பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அன்டனி டக்ளஸ் பெர்னாண்டோ எனும் பெயரில் பிரசன்னமாகியிருந்த எஸ்.ஏ.சரத்குமார மற்றும் அதுல சஞ்ஜீவ ஆகியோர் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமை உள்ளிட்ட 14 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற மஜிஸ்திரேட் விசாரணைகளில் போது சந்தேக நபர்களாக, குறித்த ஊடக சந்திப்பில் கருத்துக்களை வெளியிட்ட எஸ்.ஏ சரத்குமார மற்றும் அதுல சஞ்ஜீவ ஆகியோர், அரச சாட்சியாக மாற்றப்பட்டு மேல் நீதிமன்ற வழக்கில் பிரதான சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
நன்றி: வீரகேசரி