பல வருடங்கள் பாராளுமன்றம் தெரிவான சிரேஷ்ட எம்.பிக்களுக்கு பின்வரிசைகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் முதன்முறையாக தெரிவானவர்களுக்கு முன்வரிசை ஒதுக்கியது அநீதியானதென ஜக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் கட்சித் தலைவர் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றைய பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த எஸ்.எம் மரிக்கார், பாராளுமன்ற விவகார குழு உறுப்பினராக அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு அலி சப்ரிகள் சபையில் உள்ளனர். இதில் எந்த அலி சப்ரி என தெளிவுபடுத்துமாறு கோரினார்.
இதன்போது மேலுமொரு ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த நளீன் பண்டார ஜயமஹ எம்.பி, 30 வருடங்களாக பாராளுமன்றம் தெரிவான எம்.பிக்கள் இருக்கையில் முதன் முறையாக தெரிவான சிலருக்கு கட்சித் தலைவர்கள் என்று முன்வரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சி சார்பில் வந்த ஒரே ஒரு எம்.பிக்கு இவ்வாறு முன்வரிசை வழங்கினால் 40 தலைவர்கள் தெரிவானால் முன்வரிசையை புதிதாக அமைக்க நேரிடும், இதனை மாற்ற வேண்டும் என்றார்.
ஆளும் தரப்பில் எஸ்.பி.திசாநாயக்க, அநுர யாப்பா ஆகியோருக்கும் பின்வரிசை ஒதுக்கப்பட்டுள்ளதென்றும் அதனையும் சீர்செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
எதிர் தரப்பு கொறடா கிரியெல்ல கூறுகையில், இது தொடர்பாக பாராளுமன்ற செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் கூட்டத்தில் இது பற்றி ஆராயப்படும் என்றார். மேலும் இது தொடர்பாக கவனம் செலுத்துவதாக சபாநாயகர் அறிவித்தார்.
புதிய பாராளுமன்றத்திற்கு 15 கட்சிகள் சார்பில் எம்.பிக்கள் தெரிவாகியுள்ளனர். இதில் தமிழ் மக்கள் தேசிய முன்னணி தலைவர் சீ.வி.விக்கினேஸ்வரன், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோருக்கு முன்வரிசை ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம் பலம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பிரதம கொறடா கிரியெல்ல, கட்சித் தலைவர்களான ஆர்.சம்பந்தன், அநுர குமார திசாநாயக்க, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் முன்வரிசை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.