IPL போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 21ஆம் திகதி துபாய் சென்றது. அணி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தனித்தனியாக ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த ஆறு நாட்களில் முதல் நாள், 3 ஆவது நாள் மற்றும் 6 ஆவது நாள் என மூன்று நாட்கள் கொரோனா பரிசோதனை செய்யப்படும். மூன்று பரிசோதனைகளிலும் கொரோனா இல்லை என முடிவு வந்தால் வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
ஆறு நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்த நிலையில், இன்று பயிற்சிக்கு தயாராக இருந்தனர். இந்நிலையில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் உட்பட 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவுகள் வந்த பிறகு வீரர்களும் பயோ-செக்யூர் பப்பிள் என்ற வளையத்திற்குள் வருவார்கள். ஒரு வீரர் உட்பட 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் பயிற்சி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.