நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நோர்வூட் சென். ஜோன்டிலரி மேற்பிரிவு தோட்ட பகுதியில் உள்ள நபர் ஒருவர் தொடர்ச்சியாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொண்டு பொய்யான முறைபாடுகளை பதிவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரை நோர்வூட் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் தொடர்சியாக 119 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பொய்யான முறைபாடுகளை பதிவு செய்து வந்தமை தொடர்பில் அழைப்பினை பெற்று, இலக்கத்தின் உரிமையாளரை இனங்கண்டு கொள்வதற்காக நோர்வூட் பொலிஸார், ஹட்டன் நீதிமன்றத்தில் பீ அறிக்கையினை சமர்பித்து, அதன் ஊடாக அனுமதியினை பெற்று குறித்த தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கையடக்க தொலைபேசியினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும் சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.