சகோதரர் ரியாஜின் கைது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு நேற்று (20) பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"தற்கொலைதாரி இன்ஷாப் அஹமட், எனது சகோதரருக்கு கடந்த வருடம் ஆறு உள்வரும் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டிருக்கிறார். அந்த குற்றச்சாட்டின் பேரிலேயே எனது சகோதரர் கைது செய்யப்பட்டார். எனினும், குறிப்பிட்ட உள்வரும் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் எனது சகோதரர் தெளிவாக, சட்ட ரீதியாக நிரூபித்திருக்கிறார்.
எனினும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், எனது சகோதரர் தொடர்பில் அப்பட்டமான பொய்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் கூற்றுப்படி, எனது சகோதரர் பயங்கரவாத நடவடிக்கைக்கு வாகனம் வழங்கியிருந்தால், அதன் இலக்கம் மற்றும் அதுபற்றிய விபரங்களையும் தெரிவித்திருக்க வேண்டும். அத்துடன், பணம் வழங்கியிருந்தால் அது தொடர்பிலும் வெளிப்படுத்த வேண்டும். இதை விடுத்து, வெறுமனே அரசியல்வாதி போன்று, எழுந்தமானமாக இவர் பேசுவது வேதனையளிக்கின்றது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், எனது சகோதரரை அடைத்து வைத்துக்கொண்டு, நீதிமன்றுக்கு கூறும் விடயங்களை அங்கு தெரிவிக்காது, இவ்வாறு ஊடகங்களிடம் அபாண்டங்களை கூறுகின்றார்.
எனது சகோதரரின் சட்டத்தரணிகளை பார்க்கவிடாமலும், வாரத்துக்கு ஒருமுறை குடும்ப உறுப்பினர் ஒருவரை மாத்திரம், பத்து நிமிடங்கள் அவரைப் பார்க்க அனுமதித்துவிட்டு, பொய்யான செய்திகளை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வழங்குகின்றார். நீதிமன்றுக்கு சொல்லவேண்டிய விடயங்களை, ஊடகத்தில் மாத்திரம் பேசுவது தர்மமாகாது." என்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.