நீர்கொழும்பு சிறைச்சலையிலிருந்து ஹெரோயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பொலிஸ் சார்ஜெண்ட் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமானப்படை முகாமில் பணியாற்றும் குறித்த சார்ஜெண்ட் நேற்று (20) பிற்பகல் 3.00 மணியளவில் துறைமுக நிலைய வீதியில் வைத்து 100 கிராம் ஹெரோயின் மற்றும் 400 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைதான கட்டுநாயக்கவைச் சேர்ந்த 40 வயதான குறித்த சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இக்கடத்தல் நடவடிக்கையை மேற்கொள்ளும் கைதி ஒருவரின் வீட்டிலிருந்து 1.830 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைதியின் மனைவி மற்றும் 455 கிராம் கேரள கஞ்சாவுடன் கைதியின் மைத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் இருந்து இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர், குறித்த சந்தேகநபர் மற்றும் அவரது மனைவியுடன் கையடக்க தொலைபேசி மூலம் தொடர்ச்சியாக அழைப்பு விடுப்பதாகவும், அவரின் வழிகாட்டல்களுக்கு அமைய, பொலிஸ் சார்ஜெண்ட் உள்ளிட்ட இச்சந்தேகநபர்கள் குறித்த போதைப்பொருளை பல்வேறு நபர்களிடம் கொண்டு சேர்ப்பதாகவும், அதில் கிடைக்கும் பணத்தை குறித்த கைதியின் மனைவியின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதாகவும் தெரிய உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவகலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜெண்ட் சீதுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவரை இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய இரு சந்தேகநபர்களும் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இது தொடர்பில் சீதுவை மற்றும் மினுவாங்கொடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.