எனவே, சிங்கள பௌத்த மக்கள் தான் இந்த நாட்டுக்கு வந்தேறு குடிமக்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு ஓர் அடி நிலம் கூட சொந்தமில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்த கருத்தைக் கண்டித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைத்தீவு சிங்கள பௌத்த மக்களுக்குரியது என்றும், இங்கு ஆங்காங்கு தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பதற்காக, அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்தார்கள் என்பதற்கு இது அடையாளம் அல்ல என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையிலே, நாங்கள் பௌத்த பிக்குகளை மதிக்கின்றோம் என்ற அடிப்படையிலே அவர் சிறந்த கல்விமானாக இருக்க வேண்டும் என நாங்கள் கருதுகின்றோம். ஒரு கல்விமானாக இருக்கின்ற ஒருவர் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டியவராக இருக்க வேண்டும்.
மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற நூல்கள் பௌத்த நூல்களாக இருக்கின்றன. பௌத்தத்தை தமிழர்கள் வழிபட்டார்கள். இலக்கியம் உருவாகுவதற்கு அவர்கள் இருந்தார்கள்.
அந்த அடிப்படையில், வடக்கு, கிழக்கிலே இருக்கின்ற புத்த தொல்லியல் ஆதாரங்கள் தமிழ் பௌத்தர்களுடைய ஆதாரங்களாக இருக்கின்றதே தவிர, இவை எந்த வகையிலும் சிங்கள - பௌத்த ஆதாரங்களாக இருக்க முடியாது.
உண்மைகளை மூடிமறைப்பதில் எந்தவிதமான நன்மையையும் அடையப் போவதில்லை. ஆகவே, ஞானசார தேரர் தனது அறிவை இன்னும் கூர்மையாக்கித் தீட்டிப்பர்க்க வேண்டும்.
அவ்வாறு பார்க்கும்போதுதான் உண்மை விளங்கும். இலங்கை, இங்கு வாழும் சிறுபான்மையினருக்கும் உரிய நாடே தவிர, சிங்களவர்களுக்குத் தனித்துவமான நாடு அல்ல என குறிப்பிட்டுள்ளார்.