கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஜனாதிபதி தேர்தலின் போது கத்தோலிக்க வாக்குகளை தற்போதைய ஜனாதிபதியின் பக்கம் திசை திருப்பியதாக முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார்.
பொலன்னறுவை - மெதிரிகிரிய பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
ஈஸ்டர் தாக்குதல் பற்றி நான் வெளியிட்ட கருத்துக்கள் என் தந்தையிடம் கேட்டறிந்தவை. அதனை ரணிலே பகிரங்கப்படுத்துமாறு கோரியிருந்தார்.
அதைத்தான் நான் செய்தேன். நான் தாக்குதல் நடத்தவில்லை.
முன்னாள் ஜனாதிபதி தனக்கு தாக்குதல் பற்றி தெரியாது என்கிறார். ரணிலின் அறிவுரையின் அடிப்படையில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டது எனக்கு பிரச்சினையாக மாறியது.
தகவல்கள் முன்கூட்டியே கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் பின்னணியில் வேறு விளையாட்டு உள்ளது.
நாட்டில் தலைவர் ஒருவர் தெரிவானார், கோட்டாபய 52 வீதம், சஜித் 42 வீதம், கோட்டாபயவின் வாக்குகளில் 5 வீதத்தை எடுத்திருந்தால் இருவரும் சமநிலை வகித்திருப்பார்கள்.
இந்த 5 வீதத்தை மாற்றியது யார், புரிந்து கொள்ள முடிகின்றதா? ஈஸ்டர் தாக்குதலில் மனோநிலையோடு கத்தோலிக்க வாக்குகள் திசை மாறின, கர்தினால் அரசியல் செய்தார்.
நானும் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவன், கர்தினால் அரசியல் செய்வது வெறுக்கத்தக்கது.
கர்தினாலின் கூற்று அரசியல் ரீதியானது. இவர்களே இந்த 5 வீத வாக்குகள் திசை மாறக் காரணமானவர்கள் என தெரிவித்துள்ளார்.