
ஊரடங்கு காலப்பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் வாகன வர்த்தகர்கள் நிறைகுறைந்த பொருட்களை விற்பனைசெய்வதாக தொடர்ச்சியாக நோர்வூட் வர்த்தகசங்க உறுப்பினர்களுக்கு பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனை கருத்திற்கொண்ட குறித்த வர்த்தக சங்கம் நேற்று (07) விற்பனையில் ஈடுபட்ட வெதுப்பக வியாபாரியிடமிருந்து பாண் ஒரு இறாத்தல் விலைக்கு பெற்று அதனை நிறுத்த போது குறித்த பாண் 244 கிராமும் 260 கிராமும் காணப்பட்டுள்ளன.
சாதாரணமாக ஒரு இறாத்தல் பாண் 450 கிராம் இருக்க வேண்டும்.
குறித்த வியாபாரி நிறைகுறைந்த பாண்களை விற்பனை செய்வது தொடர்பாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக வர்த்தக சங்க தலைவர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை அடுத்து பலர் வீடு வீடாக சென்று வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் உரிய முறையில் உரிய பாதுகாப்புடன் உரிய தரத்தில் உணவுப்பொருட்களை விற்பனை செய்வதில்லை என்பது தொடர்பாகவும் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்வதாக பொதுமக்களால் உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.