தனது மகனை வெளிநாட்டிலிருந்து அழைப்பதற்காக தான் பதவியைச் துஷ்பிரயோகம் செய்யவில்லை எனவும், தந்தை என்ற வகையில் தனது மகனின் கடிதத்தை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தமை குற்றமென்றால், வணக்கம் எனத் தெரிவித்து தேர்தல் பணியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லையென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்தில் பட்டப்படிப்பிற்காக சென்ற நிலையில் கொரோனா காரணமாக நாடு திரும்ப முடியாதிருந்த நிலையில் அவரது மகன், நேற்றைய முன்தினம் (06) லண்டன் ஊடாக இலங்கை வந்தடைந்தார்.
அவரது வருகைக்கான விசேட ஏற்பாடுகளை செய்ய ஜனாதிபதியின் உதவியை பெற்றதோடு, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் செல்வாக்கைப் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில், தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர், தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நீண்ட விளக்கமொன்றை வழங்கியுள்ளார்.
குறித்த பதிவின் மொழிபெயர்ப்பு வருமாறு,
“நெதர்லாந்து அரசாங்கத்தின் புலமைப்பரிசில் ஊடாக, 18 மாதகால முதுகலைப் பட்டப்படிப்புக்காக மகன் சென்றுள்ளார். மார்ச் இறுதிக் காலப்பகுதியில் அது நிறைவடைந்த நிலையில், விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டமையால், இலங்கைக்குத் திரும்பமுடியாமல் போய்விட்டது. நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளரான எனது மகன், இன்று (06) அதிகாலை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவருடன் ஒன்றாக இருந்த அரச சேவையிலுள்ள மேலும் 04 பொயிறியியலாளர்களுடன் வரவிருந்த அவர், அதில் ஒருவரின் கல்வி நடவடிக்கை முடியாத நிலையில், அவருடன் 03 பேரே வந்தனர்.
எனது மகனை இலங்கைக்குத் திருப்பியழைப்பதற்காக, ஜனாதிபதியிடம் நான் கோரிக்கை விடுத்தேன் என்றும் அதற்கான விசேட விமானத்தை அனுப்பி வைப்பதற்கான கோரிக்கையை விடுத்தாரா என, மே 04ஆம் திகதி காலையில் மூன்று வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் என்னுடைய குடும்ப நண்பரான அரச அதிகாரி ஒருவரிடம் கேட்டதாக அவர் தெரிவித்தார். எனது மகன், மே 05ஆம் திகதியன்று அம்ஸ்டர்டேமிலிருந்து லண்டனுக்குப் போய்விட்டார். அங்கிருந்து நாடு திரும்புவாரென சொன்னபோது அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்றையதினம் (06) இணைய பத்திரிகையொன்றின் ஊடகவியலாளர் ஒருவர், எனது மகனின் வருகை தொடர்பில் செய்தியறிக்கையிடுவதற்காக, ஐனாதிபதியிடம் விசேட கோரிக்கையை முன்வைத்தீர்களா, இதற்கென விசேட பயண ஏற்பாடுகளை மேற்கொண்டீர்களா என, என்னிடம் வினவினார்.
அத்துடன், எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் இது தொடர்பில் பேசுவதோடு, ஒரு சிலர் என்னிடம் நேரடியாகவும் இது தொடர்பில் வினவியிருந்தனர்.
எனவே இச்சம்பவத்துடன் தொடர்பான ஒரு சில காரணங்களை கூற விரும்புகிறேன்.
அவர்கள் வந்தது, அவர்களுக்கென்ற பிரத்தியேக விமானத்தில் அல்ல. எனக்குத் தெரிந்தவரை, பிரித்தானியா மற்றும் இங்கிலாந்து உட்பட வட அமெரிக்காவில் உள்ள இலங்கை மாணவர்களும் அரசாங்க அதிகாரிகளும் இங்கிலாந்திற்கு வந்து, அங்கிருந்து பயண வசதிகளைப் பெறக்கூடிய ஏனைய மாணவர்கள் அதிகாரிகளுக்கும் இவ்வாய்ப்பு கிடைத்திருந்தது.
கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்து நாட்டுக்கு வர எதிர்பார்த்திருந்த அரசு அலுவலர்களாக, நெதர்லாந்து தூதரகம், இங்கிலாந்து உயர்ஸ்தானிகராலயம் மற்றும் வெளியுறவு அமைச்சு ஆகியவற்றில் அவர்கள் தங்களைப் பதிவு செய்திருந்தனர்.
அவர்கள் இலங்கைக்கு திரும்ப வசதி செய்து தருமாறு தூதரகம் ஊடாக நேரடியாக இந்த விஷயத்தை கையாளும் அரசாங்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு அது தொடர்பான கடிதங்களை வழங்கியிருந்தனர்.
எனது தொலைபேசிக்கு கிடைத்த கடிதங்களின் அச்சிடப்பட்ட மென்பொருள் பிரதிகளை பிரதமரின் செயலாளர், வெளி விவகார செயலாளர், இலங்கையர்களை மீள அழைப்பதற்கு பொறுப்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஆகியோருக்கு அனுப்பியமை மற்றும் அதனை உறுதி செய்தமை மாத்திரமே இந்த விஷயத்தில் எனது பங்களிப்பாகும். அவர்களை இங்கு கொண்டு வருவதில் ஏதேனும் சிரமங்கள் இருக்கிறதா என்றும் என்னால் இதன்போது கேட்கப்பட்டது. இதற்கிடையில், லண்டனில் ஒரு நாள் தங்க வேண்டியிருந்ததால், வீசா பிரச்சினை மற்றும் விதுரவின் மருத்துவ தேவைகள் தொடர்பில் நெதர்லாந்து தூதுவரை தொடர்பு கொண்டு பேசினேன்.
மே 05 ஆம் திகதி இதுபோன்ற கதை பரவுவதாக, கௌரவ ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் வரை, எனது மகனை நாட்டுக்கு அழைப்பது தொடர்பில் நான் ஜனாதிபதியுடன் நான் ஒருபோதும் விசாரிக்கவில்லை. இருப்பினும், எங்கள் மகனை தங்களின் விசேட உதவியுடன் நாட்டுக்கு அழைத்து வரவுள்ளதாக 04ஆம் திகதியிலிருந்து இவ்வாறானதொரு கதையொன்று பரவி வருகின்றது என, நேற்று (05) தெரிவித்தேன்.
எனது மகனை அழைத்து வர உதவி வழங்குமாறு அவரிடம் உதவி கேட்காத காரணத்தால், அவரை அழைத்து வருவது தொடர்பில் தான் யாரிடமும் பேசவில்லை என, நான் பேசியபோது பதிலளித்தார்.
எனவே, எனது மகன் விதுர தேசப்பிரியவை இலங்கைக்கு அழைக்க, நான் எனது உத்தியோகபூர்வ பதவியை எந்த வகையிலும் முறையற்ற வகையில் பயன்படுத்தவில்லை.
இது தொடர்பில் என்னுடன் பேசிய எழுதும் நபரிடம், "எனது மகன் என்பதனால் அவரை இலங்கைக்கு வர அனுமதிக்கக் கூடாதா?" என்று கேட்டேன். நான் தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் என்பதால், எனது மகனின் கடிதங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்புவது தனிப்பட்ட வகையில் அனுப்புவது முறையற்றது என்று அவர் கருதுகிறார். அவருக்கு அந்த கருத்தை கொண்டிருப்பதற்கும் அதை பகிருவதற்குமான உரிமையை நான் மதிக்கிறேன்.
நான் இவ்வதிகாரிகளிடமிருந்து எந்தவொரு விசேட உதவியையும் கேட்கவில்லை என்பதால், எனது மகனுக்கும், மற்றைய பொது அதிகாரிகளுக்கும், பாடநெறி முடித்து நாட்டுக்கும் திரும்புவதற்கான உரிமை உண்டு என்பதால் நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் நான் நம்புகிறேன். என அதில் குறிப்பிட்டிருந்தார்.