
இதன்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் அடங்கிய விஷேட வர்த்தமானி அறிவித்தல் நாளை (09) அல்லது நாளை மறுதினம் வெளியிடப்படவுள்ளது. அந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக எதிர்வரும் 11ஆம் திகதி முதல் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து தெளிவுப்படுத்தப்படும் எனவும், அதனை மீறி தனிமைப்படுத்தல் சட்ட நியதிகளுக்கு அப்பால் சென்று செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.
தற்சமயம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலிலுள்ள நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில், எதிர்வரும் 11ஆம் திகதி ஊரடங்கு அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
அவ்வாறு தளர்த்தப்படும் ஊரடங்கானது, அன்றையதினம் இரவு 8 மணிக்கு மீள அமுல் செய்யப்படும். இதுபோன்று ஒவ்வொரு நாளும் அந்த 21 மாவட்டங்களிலும் இரவு 8 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை மறுஅறிவித்தல் வரை அமுல் செய்யப்படவுள்ளது.
இந்த 21 மாவட்டங்களிலும் ஊரடங்கு நிலைமை தளர்த்தப்படும் போது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு முடியுமாக இருப்பினும், இயன்றளவு அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றி வீணாக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது.
அத்துடன் மேல் மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நிலைமையானது மறு அறிவித்தல் வரை தொடர இன்று வரை உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், அது குறித்து மாற்றம் செய்வது தொடர்பில் இன்று இரவு வரை முடிவெடுக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் ஊரடங்கை தளர்த்தாமல் பொதுமக்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இம்மாவட்டங்களில், தொழிலுக்கு செல்பவர்கள் தவிர்ந்த ஏனைய பொதுமக்கள் அடையாள அட்டைகளின் இறுதி இலக்கங்களுக்கு அமையவே வீடுகளில் இருந்து வெளியேற முடியும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இருப்பிடத்தில் இருந்து மிக அருகில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு மாத்திரமே செல்ல முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். அத்தியாவசிய சேவைகளின் பொருட்டு உணவு மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களை மாத்திரம் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், தனிமைப்படுத்தல் சட்டத்திங்கிணங்கவே வழமை போன்று நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கையில்,
“உண்மையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலேயே நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் பல உற்பத்தி நிலையங்கள், அமைச்சுக்கள், அரச நிறுவங்கள் என பலவும் அமையப்பெற்றுள்ளன. ஏனைய நாடுகளைப் போன்று இம்மாவட்டங்களில் எல்லோருக்கும் வெளியே வர முடியாது.
வேலைக்கு செல்பவர்கள், நிறுவன அழைப்பின் பேரில் செல்லலாம். தேவையான போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க முடியும். நுகர்வோருக்கு தேவையான பொருட்களை விற்பனைச் செய்ய விற்பனை நிலையங்கள் திறக்கப்படலாம். மருந்தகங்கள் திறக்கப்படலாம். இவற்றின் போது சுகாதார அமைச்சின் பரிந்துரைகளை கணக்கில் கொள்ளாது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு மாற்றமாக எவரேனும் செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நாட்டில் பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் படிமுறை படி முறையாக ஆரம்பிக்கப்படும் போதும், நாட்டில் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ள பகுதிகளில் உள்ளோர் எந்த காரணத்திற்காகவும் அப்பகுதிகளைவிட்டு வெளியே செல்லவோ, அல்லது அப்பகுதிகளுக்கு வெளியே இருந்து நபர்கள் உள் நுழையவோ அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் கூறினர்.
நாட்டின் நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவர முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை குறிக்கும் வழிகாட்டிப் புத்தகமொன்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள அப்புத்தகத்தில், வழமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் போது கடைப் பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.