தென்னாபிரிக்கா, டர்பன் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 'டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன்' முறையில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில், நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
முதலில் களமிறங்கிய தென் ஆபிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
தென் ஆபிரிக்கா அணி சார்பில் டிகொக் 121 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் டச்சன் 50 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இதனடிப்படையில் இலங்கை அணிக்கு 332 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களையும் இழந்து 35 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை காரணமாக போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
பின்னர் 24 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 193 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இருப்பினும் இலங்கை அணி 24 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை மட்டுமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.
மேலும் இத்தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டீ20 போட்டிகளை கொண்டிருந்த நிலையில் எஞ்சியிருக்கும் 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டீ20 போட்டிகளில் இலங்கை அணியின் திறனை வெளிப்படுத்துமா?
எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவிருக்கும் அடுத்த ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றிபெற யாழ் செய்திகள் சார்பாக எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.